court

img

பிச்சை எடுங்கள்; திருடுங்கள்; ஆனால், மக்கள் உயிரைக் காத்திடுங்கள்..... தில்லி உயர் நீதிமன்றம் கடும் விமர்சனம்....

புதுதில்லி:
தில்லியில் கொரோனா நோயாளிகளுக்குத் தேவைப்படும் ஆக்சிஜனுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பிச்சை எடுங்கள்; திருடுங்கள்; ஆனால், மக்கள் உயிரைக் காத்திடுங்கள் என மத்திய அரசை, தில்லி உயர் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.

தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதைச் சமாளிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்மீதான விசாரணை தில்லி உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. நீதிபதிகள் விபின் சாங்வி, ரேகா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது.அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

தில்லியில் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால், உண்மை நிலவரத்தை எப்படி மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது? ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள்உயிரிழப்பதை அனுமதிக்க முடியாது. பிரச்சனையைப் புரிந்துகொண்டு உணர்வுப்பூர்வமாக அணுகுங்கள். மருத்துவமனைகளில் தேவை அதிகரித்துள்ளது எனக் கூறப்படுகிறது. இந்த வேளையில் தொழிற்சாலைகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை மருத்துவத் தேவைக்குத் திருப்பிவிடுமாறு நீதிமன்றம் உத்தரவிடுகிறது. மக்கள் உயிரைவிடப் பொருளாதார நலன் முக்கியமானது அல்ல. மத்திய அரசுக்கு மக்கள்உயிர் மீது அக்கறையில்லையா? என வினவினர். மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஆக்சிஜன் தட்டுப்பாட்டைச் சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்து தில்லிமுதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்குத் தெரிவித்துள்ளதாகவும் விளக்கினார்.அதற்கு நீதிபதிகள், ஒருசில மருத்துவமனைகள்தான் ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பாக நீதிமன்றத்தை அணுகியுள்ளன. ஆனால், ஆக்சிஜன் தேவை 5 மடங்கு அதிகரித்துள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தமாகத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க வேண்டியது மத்திய அரசின்கடமை என்று கண்டிப்புடன் கூறினர்.

அப்போது சொலிசிட்டர் ஜெனரல்கூறுகையில், எல்லா அதிகாரமும் அதிகாரிகளுக்கு இல்லை. தற்போதைக்கு வழக்குத் தொடர்ந்துள்ள மருத்துவமனைகளின் நெருக்கடியைச் சமாளிக்கும் அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் நேரம் கொடுத்தால் மத்திய அரசின் கருத்தைக் கேட்டுக் கூற முடியும் என்றார்.அவரின் இந்த பதிலால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், நீங்கள் உங்களுக்குத் தேவையான இனிமையான நேரத்தைப் பொறுமையாக எடுத்துக் கொள்ளுங்கள். மக்கள் இங்கே மடிந்து கொண்டு இருக்கட்டும். இப்படி ஓர் இக்கட்டான நேரத்தில் வேறெங்கெல்லாம் ஆக்சிஜன் இருக்கிறதோ அங்கெல்லாம் பிச்சை எடுங்கள், கடனாகக் கேளுங்கள், இல்லை திருடுங்கள் என்று கோபமாகத் தெரிவித்தனர். பொறுப்பைத் தட்டிக் கழிப்பதால் மக்களின் உயிர்தான் பறிபோகும் என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

;